சுவா சூ காங் குடியிருப்பு வட்டாரத்தில் காட்டுப் பன்றி

சுவா சூ காங் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை ஒரு காட்டுப் பன்றி திரிந்துகொண்டிருந்தவாறு காணப்பட்டது.

புளோக் 544 சுவா சூ காங் ஸ்திரீட் 52ல் காலை 7.30 மணிக்கு அக்கம்பக்க வட்டாரவாசிகள் அந்தக் காட்டுப் பன்றியைக் கண்டனர். காட்டுப் பன்றி ஒன்று அந்தச் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகக் காணப்பட்டதாக ‘ஏக்கர்ஸ்’ விலங்கு நல அமைப்பின் துணைத் தலைமை நிர்வாகி அன்பரசி பூபால் தெரிவித்தார். 

காட்டுப் பன்றி உலாவிக்கொண்டிருந்த அந்த இடத்தில் விலங்குகளுக்கு உணவு வைக்கப்பட்டிருந்ததாகத் திருவாட்டி அன்பரசி தெரிவித்தார். உணவு அங்கு வைக்கப்பட்டிருந்ததால் காட்டுப் பன்றிகள் அங்கு அதிகம் காணப்பட்டதாக அவர் கூறினார். 

காட்டுப் பன்றிகளிடமிருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகியே இருக்குமாறு ஏக்கர்ஸ் அமைப்பு பொதுமக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளது. இந்த மிருகங்கள் அருகே நெருங்கினால் திடீர் அசைவுகளையும் சத்தங்களையும் தவிர்க்குமாறும் ஏக்கர்ஸ் கேட்டுக்கொண்டது.

இதுபோல், கடந்த சில மாதங்களாகக் காட்டுப் பன்றிகள் பொது இடங்களில் காணப்பட்டு வந்தன. பொங்கோல் வட்டாரத்திலுள்ள ‘வாட்டர்வே’ கடைத்தொகுதிக்கு அருகே ஜனவரி 12ஆம் தேதியன்று காட்டுப் பன்றி ஒன்று லாரி விபத்தில் உயிரிழந்தது. கடந்தாண்டு ஜூலையில் ஒரு காட்டுப் பன்றி சுவா சூ காங் வட்டாரத்தில் காணப்பட்டது. எந்தத் தீங்குமின்றி அந்தப் பன்றி அகன்று வனப்பகுதி ஒன்றுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.