வரவு செலவுத் திட்ட உரை: அடுத்த நிலைக்குச் செல்லும் சிங்கப்பூர்

சிங்கப்பூர் அடுத்த நிலைக்கு அடியெடுத்து வைத்திருப்பதாக நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் தமது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்திருக்கிறார்.

உலகமயமாதலுக்கு ஆதரவு குறைந்து வருவதாகத் திரு ஹெங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதனுடன், உலகப் பொருளியலின் மையநிலை, ஆசியாவின் பக்கம் திரும்பியுள்ளது என்று அவர் கூறினார். வேகமாகும் பொருளியல் முன்னேற்றம், மாறிவரும் மக்கள் தொகை ஆகியவை தேசிய அளவில் மட்டுமின்றி வட்டார அளவிலும் உலக அளவிலும் ஒன்றோடு ஒன்று சிக்கலான வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் திரு ஹெங் சொன்னார். அனைத்துலக அளவில், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக மோதல், இரு நாடுகளுக்கும் இடையிலான பலப்பரிட்சையாகவும் போட்டா போட்டி ஆட்சிமுறையாகவும் உருவெடுத்துள்ளதாகத் திரு ஹெங் தெரிவித்தார். இதனால் உலக அரசியலில் நிச்சயமற்ற நிலை அதிகரித்திருப்பதாகத் திரு ஹெங் கூறினார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக வளப்பத்தையும் நிலைத்தன்மையையும் அனுபவித்த ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தங்களது ஆற்றலை அதிகபட்சமாக விரிவுபடுத்தலாம். இருந்தபோதும், அக்கம்பக்க நாடுகளுக்கு இடையேயும் அவ்வப்போது வேறுபாடுகள் ஏற்படும் என்று திரு ஹெங் கூறினார். மலேசியாவுடன் அண்மையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் திரு ஹெங் தெரிவித்தார். இத்தகைய வேறுபாடுகள் ஏற்படும்போது சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்து சிங்கப்பூரின் நிலையை அமைதியான முறையில் உறுதியுடன் எடுத்துரைக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

பரஸ்பர ஒற்றுமை, பொதுவான அக்கறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கலான  சர்ச்சைகளை சிங்கப்பூர் அனைத்துலகச் சட்டங்களின்படி தீர்த்துள்ளது. இதே முறையில் சிங்கப்பூர் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று திரு ஹெங் சொன்னார்.