சிறிய நடுத்தர நிறுவனங்களுக்குக் கூடுதல் உதவி

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தனியார் மற்றும் பொதுத்துறையுடன் ‘ஸ்கேல் அப் எஸ்ஜி’ திட்டத்தைத் தொடங்கும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார். 

‘ஸ்கேல் அப் எஸ்ஜி’  நன்றாக வளரும் உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து புதிய ஆற்றல்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்க்க முற்படும் என்று திரு ஹெங் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய தமது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார். புத்தாக்கம், வளர்ச்சி, அனைத்துலகமயமாதல் ஆகியவை இதன் நோக்கம் என்று அவர் கூறினார்.

புத்தாக்கத்தை ஆதரிப்பதற்காக ‘இன்னோவேஷன் ஏஜண்ட்ஸ்’ திட்டம் சோதனை செய்யப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், நிபுணர்களைக் கொண்டுள்ள குழு ஒன்றிடமிருந்து நிறுவனங்கள் புத்தாக்கம், தொழில்நுட்ப வர்த்தகமயம் ஆகியவை குறித்த ஆலோசனைகளைப் பெறலாம். 

இந்நிறுவனங்களுக்குத் தனியார் முதலீட்டைப் பெற உதவுவதில் அரசாங்கம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்றும் திரு ஹெங் தெரிவித்தார். 2010ஆம் ஆண்டில் இதுவரை சிறிய நடுத்தர நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட இணை-முதலீட்டுத் திட்டத்திற்குக் கிட்டத்தட்ட 400 மில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக திரு ஹெங் சுட்டினார். இதுவரை அரசாங்கம் செய்திருக்கும் முதலீடுகளால் சிறிய நடுத்தர நிறுவனங்கள் கூடுதலாக 1.3 பில்லியன் வெள்ளி நிதியைப் பெற்றிருப்பதாக அவர் கூறினார். 

சிங்கப்பூரின் சிறிய நடுத்தர நிறுவனங்கள் நிதியைப் பெறும் முக்கியமான வழிகளில் கடன்கள் தொடர்ந்து திகழ்வதாகத் திரு ஹெங் தமது உரையில் தெரிவித்தார். 

‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு தற்போது வழங்குகிற பல்வேறு நிதித்திட்டங்கள் இனி ஒரு என்டர்பிரைஸ் நிதியாதரவுத் திட்டமாக இணைக்கப்படும் என்று திரு ஹெங் தெரிவித்தார். வர்த்தகம், நடப்பு மூலதனம், அசையாச் சொத்துகள், நிறுவனங்களின் கையக நடவடிக்கை உள்ளிட்டவற்றை இந்தத் திட்டம் ஆதரிக்கும் என்று அவர் கூறினார்.

திட்டம் இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். சிறிய நடுத்தர நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக ‘எஸ்எம்இ’ நடப்பு மூலதனம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று அமைச்சர் கூறினார்.