தாயாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக மிக்கி புரோச்செஸ் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் அண்மையில் எச்ஐவி தரவுத்தளத்திலிருந்து நோயாளிகளின் தனிப்பட்ட தகவல் கசிந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் மிக்கி ஃபெரேரா புரோச்செஸ், அமெரிக்காவின் கென்டாக்கி மாநிலத்திலுள்ள தனது தாயாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டைத் தனது தாயார் தொடர விரும்பவில்லை என்று அறிவதாக 34 வயது புரோச்செஸ் அமெரிக்க வட்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார். எச்ஐவி தகவல் கசிவு பற்றிய செய்தியால் தனது வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் சொந்தக் காலில் தன்னால் இப்போது நிற்க முடியவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆயினும், இந்தக் குற்றச்சாட்டின் பதிவுக்குப் பின்னர் இந்த நீதிமன்ற வழக்கு புரோச்செஸின் தாயாரின் வழக்கு அல்ல என்றும் அது மாநில அதிகாரிகளின் வழக்கு என்று நீதிபதி புரோச்செஸிடம் கூறினார். மோசடி, போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றுக்காக புரோச்செஸ், சிங்கப்பூரில் ஓர் ஆண்டுகாலம் சிறையிலிருந்தார். அதன் பிறகு அவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.கென்டாக்கி மாநிலத்திலுள்ள ‘கிளார்க் கவுன்டி’ மாவட்டத்தில் தனது தாயாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அவர் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 27ஆம் தேதி அந்த வீட்டுக்குச் சென்ற பிறகு மீண்டும் வரக்கூடாதென புரோச்செஸை அவரது தாயார் பலமுறை எச்சரித்தும் புரோச்செஸ் தமது சொந்த சொத்து குறித்து கேட்பதற்காகத் திரும்பவும் தாயாரின் வீட்டுக்குச் சென்றார்.

14,200 எச்ஐவி நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டதற்கு புரோச்செஸ் காரணம் என்று சிங்கப்பூரின் சுகாதார அமைச்சு கடந்த மாதம் தெரிவித்தது. இந்த வெளியீட்டின் தொடர்பில் சிங்கப்பூர் சிறைச் சேவை கடந்த சனிக்கிழமை புகார் செய்தது. இதனை செய்தது ஏன் என அமெரிக்க நீதிபதி கேட்டபோது, தான் சிறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இந்தச் சம்பவத்தை சிங்கப்பூர் சுகாதார அமைச்சு மூடி மறைத்ததாகவும் புரோச்செஸ் கூறினார். புரோச்செஸின் குற்றச்சாட்டு பொய் என்று சுகாதார அமைச்சு கூறியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி கடற்பாலத்தில் நடந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. படம்: சாவ்பாவ்

19 Jun 2019

கடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்

சிங்கப்பூரிலுள்ள 16 நகர மன்றங்களும் புதிய ஆளுமை முறைமைக்கு உட்பட்டுச் செயல்படவேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

நகர மன்றங்களுக்குப் புதிய ஆளுமை முறைமை

ஜூரோங் தீவில் உள்ள இவோனிக் நிறுவனத்தின் இரண்டாவது ஆலை நேற்று தனது செயல்பாட்டை தொடங்கியது. படம்: இவோனிக்

19 Jun 2019

சிங்கப்பூரில் $768 மி. செலவில்  ‘இவோனிக்’கின் 2வதுநிறுவனம்