காற்பந்து திடலில் கைகலப்பு; மருத்துவமனையில் இருவர்

காற்பந்து ஆடிய இரண்டு குழுக்கள் கைகலப்பில் ஈடுபட்டதை அடுத்து இரண்டு விளையாட்டாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் திடலில் சாய்ந்து கிடந்ததையும் அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்ததையும் காணொளி ஒன்று காட்டியது. அவருக்கு அருகில் விளையாட்டாளர்கள் ஒருவரோடு ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறு காணப்பட்டனர். அந்த 19 நிமிட காணொளியில் விளையாட்டாளர்கள் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவாறும் காணப்பட்டனர். தெம்பனீஸ் வட்டாரத்திலுள்ள ஈஸ்ட் ஸ்ப்ரிங் உயர்நிலைப் பள்ளியின் காற்பந்து திடத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. 

காயமடைந்த 34 வயது ஆடவர் ஒருவரும் மற்றொரு 39 வயது ஆடவரும் சுயநினைவுடன் சாங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 

சம்பவத்தின் தொடர்பில் போலிசாரின் விசாரணை தொடர்கிறது. இந்நிகழ்வின் காரணத்தைப் பற்றி அறிந்திருப்பதாகவும் விளையாட்டு வினையாகப் போனது மிருந்த வருத்தமளிப்பதாக ‘ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர்’ விளையாட்டு அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். காற்பந்து திடல்களில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக முன்னைய தேசிய காற்பந்தாளர் ஆர். சசிகுமார், 43, ‘தி நியூ பேப்பர்’ நாளிதழிடம் தெரிவித்தார்.