தாயார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புரோச்செஸ்

சிங்கப்பூரில் எச்ஐவி பாதிப்புக்கு ஆளானோரின் தகவல்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப் படும் அமெரிக்கரான மிக்கி ஃபெரேரா புரோச்செஸ் அமெரிக்கா வின் கெண்டக்கி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.
அவர் தமது தாயாரின் வீட்டிற் குள் அத்துமீறி நுழைந்ததுடன், அங்கிருந்து வெளியேற மறுத்ததன் தொடர்பில் கடந்த டிசம்பரில் கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச் சாட்டுகள் தொடர்பில் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை புரோச்செஸ் ஏற்க மறுத்துவிட்டார். நீதிமன்ற விசாரணைக்கு முன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் பேசிய அவர், எச்ஐவி கசிவு விவகாரம் தமக்கு தேவையில்லாத சிரமத் தைத் தந்துள்ளதாகக் கூறினார்.
“குற்றத்தை நான் ஒப்புக்கொண் டால் எனது வேலையை நான் இழக்கக்கூடும்,” என்றார் அவர்.
மோசடி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத் தண்டனையை ஆற்றிய பிறகு சிங்கப்பூரிலிருந்து சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட புரோச்செஸ், கடந்த டிசம்பர் 8ஆம் தேதி கெண்டக்கியில் உள்ள அவரது தாயாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி அவரது தாயாரின் வீட்டிற்குச் சென்றதையடுத்து அங்கு மீண்டும் செல்ல வேண்டாம் என்று 34 வயது புரோச்செசுக்கு எச்சரிக்கப் பட்டிருந்தது.