ஏவிஏ : மலைப்பாம்பு தவறான முறையில் கையாளப்படவில்லை

ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள டேங் பிளாசாவுக்கு அருகில் காணப்பட்ட ஒரு மலைப்பாம்பை அகற்றுவதற்காக அழைக்கப்பட்ட பூச்சிக் கட்டுப்பாட்டு ஊழியர்கள், மலைப்பாம்பைத் தவறான முறையில் கையாளவில்லை என்று வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவித்தது. கடந்த மாதம் 29ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது.

“பொதுமக்களின் பாதுகாப்புக்கு மலைப்பாம்பு உடனடி அச்சுறுத்தலாக இருந்ததாக எங்களது விசாரணையில் தெரிய வந்தது. அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் அந்த மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.  ‘ஏண்டிசிமெக்ஸ்’ பூச்சிக் கட்டுப்பாட்டு ஊழியர்கள் மலைப்பாம்பை வேகமாகவும் நடைமுறைக்கு ஒத்துப்போகும் விதத்திலும் அகற்ற வேண்டியிருந்தது,” என்று ஏவிஏ தனது அறிக்கையில் குறிப்பிட்டதாக ‘ஏண்டிசிமெக்ஸ் நிறுவனம் நேற்று தெரிவித்தது.

ஊழியர்களில் ஒருவரான திரு ஃபர்ஹானை அந்த மூன்று மீட்டர் மலைப்பாம்பு கடித்ததால் மலைப்பாம்பை  வல்லந்தமாகக் கட்டுப்படுத்தவேண்டி இருந்ததாக ஏவிஏ கூறியது. பின்னர் அந்த மலைப்பாம்பு சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பாம்பு கையாளப்பட்ட விதம் குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சிலர் தங்களது குறைகூறலை வெளிப்படுத்தியுள்ளனர்.