சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்தவருக்குச் சிறை, பிரம்படி

சட்ட விரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் போலிஸ் படையும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா பகுதியில் பிப்ரவரி 10ஆம் தேதி இரவு 10.46 மணி அளவில் 21 வயதும் 16 வயதும் உடைய இருவர் சிங்கப்பூரை நோக்கி வந்த மரப் படகில் இருந்ததை கரையோர காவல் படையினர் கண்டனர்.
இருவரையும் வழிமறித்த போலிஸ் இரவு 11.33 மணிக்கு அவர்களைக் கைது செய்தது.
21 வயது ஆடவருக்கு ஆறு வார சிறையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. 16 வயது இளையருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
இருவரும் இந்தோனீசிய நாட்டவர்கள் என அறியப்படுகிறது.
குடிநுழைவுச் சட்டத்தின்படி, கள்ளத்தனமாக சிங்கப்பூருக்குள் நுழைபவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறை, குறைந்தது மூன்று பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.
சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாக நுழைவதை கடுமையாகக் கருதுவதாக சிங்கப்பூர் போலிஸ் படையும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் அறிக்கையில் தெரிவித்துள்ளன.