மண்டாய் சாலை விபத்தில் உதவிய ராணுவ அதிகாரிகளுக்குப் பாராட்டு

மண்டாய் ரோட்டில் ஏற்பட்ட விபத்தின்போது உரிய நேரத்தில் உதவிய சிங்கப்பூர் ஆயுதப் படையின் மருத்துவ அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (பிப்ரவரி 18ஆம் தேதி) காலை 8.52 மணிக்கு  மண்டாய் ஹில் முகாமுக்கு (Mandai Hill Camp) அருகே 46 வயது ஆடவர் ஒருவரைச் சிறிய ரக பேருந்து மோதியது. இதனால் காயமடைந்த ஆடவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

பேருந்தால் அடிபட்ட அந்த ஆடவர் ஒரு வெளிநாட்டு ஊழியர் எனத் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடப்பதற்கு முன்னர் அவர் பலமுறை சாலையைக் கடந்து சென்றதாக ‘‌ஷின் மின் நாளிதழ்’ கூறியது.

கேப்டன் (டாக்டர்) விக்ரம் மணியன், மூன்றாம் சார்ஜண்ட் நி சுசு காங் மெட்டா, கார்பரல் ஜோசஃப் ஆன்ட்ரே அக்ஸேன் டகனே, கார்பரல் பி. அரவிந்த் கிருஷ்ணா, கார்பரல் கின்சன் டான் காய் ஃபெங், லான்ஸ் கார்பரல் டேவிட் லீ வெய் மிங் ஆகியோர் காயம்பட்ட ஆடவருக்கு உதவி செய்த மருத்துவ அதிகாரிகள் என்று சிங்கப்பூர் ராணுவப்படை நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.

விபத்து நடந்ததாகக் கேள்விப்பட்ட அந்த அறுவரும், சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து சென்று ஆடவருக்கு சிகிச்சை அளித்ததாக சிங்கப்பூர் ராணுவப்படை கூறியது.

“காயமடைந்த ஆடவர் விரைவில் குணமடையவேண்டும் என்று சிங்கப்பூர் ராணுவப்படை விரும்புகிறது. தேவைப்படும்போது உதவ முன்வர எப்போதும் தயாராக இருக்கும் எங்களது சேவையாளர்களை நாங்கள் பாராட்டுகிறோம்,” என்றது சிங்கப்பூர் ராணுவப்படை.