பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மசெக நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிரதமர் கொண்டாட்டம்

பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் (பிப்ரவரி 19ஆம் தேதி) இஸ்தானா அதிபர் மாளிகையில் விருந்து நிகழ்ச்சி நடத்தினார்.

முன்னோடித் தலைவர் ஓங் பாங் முன், முன்னைய நாடாளுமன்ற நாயகர் டான் சூ கூன் ஆகியோருடன் முன்னைய அமைச்சர்கள் எஸ் தனபாலன், அகமது மாத்தார், லிம் ஹுவீ ஹுவா உள்ளிட்டோரும் விருந்தில் கலந்துகொண்டனர். அவர்களுடன், முன்னைய நாடாளுமன்றச் செயலாளர்கள் மைதீன் பணிக்கர், ஹவாசி டைப்பி மற்றும் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. செல்வதுரை, ஹோ கியோக் சூ ஆகியோரும் வருகையளித்தனர்.

இவர்களைக் கௌரவிக்க பிரதமர் லீயுடன் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங், கல்வி அமைச்சர் ஓங் யீ காங் உள்ளிட்ட தற்போதைய அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியின் படங்களைத் திரு லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். இவர்கள் பல ஆண்டுகளாகச் சேவையாற்றியுள்ளனர். இவர்களில் பலர் தொடர்ந்து சமூகத்திற்குப் பங்காற்றி வருகின்றனர். அவர்களது நட்புக்கும் தோழமை உணர்ச்சிக்கும் எனது நன்றி,” என்று திரு லீ கூறினார்.