பள்ளிப் பேருந்து கட்டணங்களைக் கட்டுப்படுத்தக் கோரும் பெற்றோர்

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான பள்ளிப்பேருந்து சேவையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை அதிகமாக உயர்த்துவதாகப் பெற்றோர் சிலர் கூறுகின்றனர். உயர்ந்திருக்கும் கட்டணங்கள் கட்டுப்படியாகவில்லை என்றும் பொதுப் போக்குவரத்தில் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவதாகவும் பெற்றோர் கூறுவதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி தனது மாணவர்களுக்காக ‘ரிவால்விங் டிரான்ஸ்போர்ட்’ என்ற போக்குவரத்து நிறுவனத்தைப் பணியில் அமர்த்தியது.  ‘ரிவால்விங் டிரான்ஸ்போர்ட்’, தனது இருவழிப் பயணச் சேவைகளுக்கு 550 வெள்ளி மாதக் கட்டணம் விதித்திருந்தது. இந்தத் தொகை, முன்னைய குத்தகையாளர் வசூலித்த கட்டணத்தைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உள்ளது. 

பள்ளியின் தலையீட்டுக்குப் பிறகுதான் கட்டணம் குறைக்கப்பட்டது. பொங்கோல் வட்டாரத்தில் வசிக்கும் பள்ளி மாணவிகளுக்கான கட்டணம் இப்போது மாதத்திற்கு 350 வெள்ளியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 75  வெள்ளி வரையிலான விலைக்கழிவும் கொடுக்கப்பட்டுள்ளது.

சராசரியாக, தனியார் பள்ளிப் பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒருவழிப் பயணக் கட்டணம் 105 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது. இருவழிப் பயணக் கட்டணம் 126 வெள்ளியாக உள்ளது. ஆனால் இந்தக் குறைந்தபட்சக் கட்டணங்கள் பள்ளிக்கும் இரண்டு கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தில் இருக்கும் வீடுகளுக்கும் இடையிலான பயணங்களுக்கு மட்டும் வசூலிக்கப்படுகின்றன.

புக்கிட் பாஞ்சாங் தொடக்கப்பள்ளி (70 வெள்ளி முதல் 130 வெள்ளி வரை), பெய்யிங் தொடக்கப்பள்ளி (75 வெள்ளி முதல் 180 வெள்ளி வரை), சவுத் வியூ தொடக்கப்பள்ளி (65 வெள்ளி முதல் 150 வெள்ளி வரை), கிளமெண்டி தொடக்கப்பள்ளி (60 வெள்ளி முதல் 250 வெள்ளி வரை), சிங்னான் பள்ளி (90 வெள்ளி முதல் 120 வெள்ளி வரை) ஆகியவை ஆகக் குறைவான பேருந்து கட்டணங்களைக் கொண்டிருக்கும் தொடக்கப்பள்ளிகள் என ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது. ‘ஹோலி இன்னசன்ட்ஸ்’ தொடக்கப்பள்ளி (170 வெள்ளி முதல் 700 வெள்ளி வரை), ‘சிஎச்ஐஜே அவர் லேடி அஃப் த நேட்டிவிட்டி’ தொடக்கப்பள்ளி (170 வெள்ளி முதல் 700 வெள்ளி வரை) ஆகியவை ஆக அதிகமான பேருந்து கட்டணங்களைக் கொண்டிருக்கும் தொடக்கப்பள்ளிகள் என்று கூறப்படுகிறது.