தொடர்ந்து உயரும் ‘995’ அழைப்புகள்

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் ‘995’ அவசரத் தொலைபேசி எண்ணுக்குச் செய்யப்படும் அழைப்புகள் 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

சராசரியாக, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 500 தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் அளிக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் கிட்டத்தட்ட 188,000 அழைப்புகளை ஏற்கின்றனர். ஆயினும் ஒவ்வொரு 10 அழைப்புகளில் ஒன்று அவசரம் இல்லாத அழைப்பாக அல்லது போலி அழைப்பாக இருப்பதாகக் குடிமைத் தற்காப்புப் படை தனது வருடாந்திர புள்ளிவிவர வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது.

பெறப்படும் அழைப்புகளில் 75 விழுக்காடு அழைப்புகள் இதயச் செயலிழப்பு, சுயநினைவு இழப்பு உள்ளிட்ட மருத்துவப் பிரச்சனைகளுக்காகச் செய்யப்பட்டவை. 18 விழுக்காடு அழைப்புகள் வேலையிட விபத்துகள், உயர்மாடியிலிருந்து கீழே விழும் சம்பவங்கள், சண்டைகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. எஞ்சிய அழைப்புகள் சாலை விபத்துகள் குறித்தவை. 

அவசர அழைப்புகளில் கிட்டத்தட்ட பாதி, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு நேரிடும் அசம்பாவிதங்களுடன் தொடர்புடையவை. 

அதிகரிக்கும் அழைப்புகள், மனிதவளப் பற்றாக்குறை ஆகியவற்றைச் சமாளிப்பதற்காக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை ஏப்ரல் 2017ஆம் ஆண்டில் இரண்டு கட்ட கட்டமைப்பு முறையைச் செயல்படுத்தியது. உதவி தேவைப்படுவோரின் நிலை எவ்வளவு கடுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க இந்த முறை அதிகாரிகளுக்கு உதவுகிறது. இந்த முறையால் அவரச சூழ்நிலைகளில் உதவியை மேலும் விரைவாக வழங்க முடிவதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

கட்டமைப்பின் இரண்டாம் கட்டத்தைச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வரும் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது.