ஜூரோங் வெஸ்டில் தீ; புளோக்கின்  90 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

ஜூரோங் வெஸ்ட் வீவக வீடு ஒன்றில் நேற்று முன்தினம் பின்னிரவு நேரம் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் கிட்டத்தட்ட 90 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52, புளோக் 517ஏ வீடு ஒன்றில் மூண்ட தீ குறித்து பின்னிரவு 1.30 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது. 12ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் படுக்கை அறையில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது. நெருப்பின் புகையை உள்ளிழுத்ததற்காக ஓர் ஆடவரும் ஒரு பெண்ணும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 60 வயது மதிக்கத்தக்க இருவரும் தீ மூண்ட வீட்டில் வசித்து வந்தவர்கள் என்று வான்பாவ் சீன நாளிதழ் தெரிவித்தது. கட்டடத்தின் 11ஆவது மாடி முதல் 16ஆவது மாடி வரையில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சம்பவத்தைப் பார்த்த ஒருவர் நாளிதழிடம் தெரிவித்தார். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.