சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் முதல் தலைமை நிர்வாக அதிகாரி லின் ஹோலோவே காலமானார்

பழம்பெரும் செய்தியாளரும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் முன்னைய தலைமை நிர்வாக அதிகாரியுமான லின் ஹோலோவே நேற்று முன்தினம் (பிப்ரவரி 23ஆம் தேதி) காலமானார். அவருக்கு 90 வயது.

நூலகராகப் பயிற்சி பெற்ற திரு ஹோலோவே, டைம்ஸ் பப்ளி‌ஷிங், ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ ஆகிய பதிப்பகங்களுக்குத் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றினார். ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ நிறுவனத்தில் அவர் 1961ஆம் ஆண்டு சேர்ந்தார். சிங்கப்பூரின் செய்தித்துறையை வளர்த்த பெருமை அவரைச் சேரும்.

1984ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் உருவாக்கத்தை அவர் மேற்பார்வையிட்டார். ‘சிங்கப்பூர் நியூஸ் அன்ட் பப்ளிகேஷன்ஸ் லிமிட்டட்’, ‘டைம்ஸ் பப்ளி‌ஷிங் பர்ஹாட்’, ‘த ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்’ ஆகிய மூன்று அமைப்புகள் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸாக இணைந்தன. இதன் பிறகு அந்நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பதவியேற்றார். ஆயினும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் ஓர் ஆண்டுக்குப் பிறகு பதவி விலகினார். பிறகு அவர், ஹாங்காங்கின் சவுத் சைனா மார்னிங் போஸ்டின் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்றார்.

திரு ஹோலோவே தமது மனைவி என் வோங்-ஹோலோவேயையும் சகோதரி ஹேசல் மரியோட்டையும் விட்டுச் செல்கிறார்.