சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின்  முதல் தலைமை நிர்வாகி காலமானார்

ஊடகத் துறையில் பழுத்த அனுபவமுடையவரும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைமை நிர்வாகியுமான திரு லின் ஹோலோவே கடந்த சனிக்கிழமை இரவு அமரரானார். அவருக்கு வயது 90. நூலகத் துறையில் கல்வி கற்றவரான திரு ஹோலோவே, டைம்ஸ் பப்ளி‌ஷிங், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் ஆகியவற்றில் பணியாற்றி சிங்கப்பூரில் செய்தித்துறையை செதுக்க உதவியவர். தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் அவர் 1961ஆம் ஆண்டு சேர்ந்தார். அவர் அங்கு பணிபுரிந்த காலத்தில் 1984ஆம் ஆண்டு சிங்கப்பூர் நியூஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ் லிமிடட், டைம்ஸ் பப்ளி‌ஷிங் பெர்ஹாட், தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ் ஆகியவை இணைந்து சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் உருவானது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பல்வேறு மொழி நாளிதழ்கள் ஒரே குடையின்கீழ் வந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சின் முதல் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்ற திரு ஹோலோவே, ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் அவர் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியானார்.