துவாஸ் சோதனைச் சாவடியில் பேருந்து விபத்து; ஒருவர் மரணம்

துவாஸ் சோதனைச் சாவடியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உதவிக்கான அழைப்பு இன்று (பிப்ரவரி 26) காலை 4.25 மணிக்குக் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

“சம்பவ இடத்தில் சடலம் ஒன்று காணப்பட்டது. மேலும், விபத்தில் காயமடைந்த 16 பேர் இங் டெங் ஃபொங் மருத்துவமனைக்கும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்,” என்றது குடிமைத் தற்காப்புப் படை.

சாலையோரத் தடுப்பின்மீது பேருந்து மோதியதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது பேருந்துக்கு அடியில் ஓட்டுநர் சிக்கி இருந்ததாகவும் பின்னர் அவர் காப்பாற்றப்பட்டதாகவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது. 

கனரக வாகனங்கள் செல்லும் சாலையை இந்த விபத்து இடைமறித்ததாகவும் மலேசியாவிலிருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்துகளும் லாரிகளும் சிங்கப்பூருக்குள் நுழைய இயலவில்லை என்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று காலை 6.05 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அந்த வாகனங்கள் மலேசியாவுக்கு மீண்டும் திரும்ப வேண்டியிருந்ததாகவும் ஆணையம் கூறியது.