ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வாங்கப்பட்ட காடை முட்டையில் புழுக்கள்

அங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியிலிருந்து காடை முட்டைகள் கொண்ட பொட்டலத்தை வாங்கிய ஆடவர், அதனைச் சமைக்கத் தயாராகிக் கொண்டிருந்தார். 38 வயது திரு டான் ஜியான் ஹோங் அந்தப் பொட்டலத்தைத் திறந்து பார்க்கையில் ஒரு முட்டையிலிருந்து பல புழுக்கள் 
வெளிவந்ததைக் கண்டார்.

செஃப் பிரேண்ட் (Chef Brand) நிறுவனச் சின்னத்தைக் கொண்ட காடை முட்டை பொட்டலத்தை அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றார். முட்டைகளின் காலாவதி தேதி மார்ச் 11 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்த பிறகே அதனை வாங்கியதாகத் திரு டான் கூறினார்.

கெட்டுப் போன அந்த முட்டையின்மீது புழுக்கள் இருந்ததைக் காண்பிக்கும் காணொளியையும் வேறு சில படங்களையும் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார். இது பற்றி ஃபேர்பிரைஸ் பேரங்காடி தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் முட்டைகளின் விலையைத் திரும்பத் தர முற்பட்டதாகவும் திரு டான் கூறினார்.

நடந்தது குறித்து திரு டானிடம் ஃபேர்பிரைஸ் மன்னிப்பு கேட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். “சம்பவத்தை விசாரிப்பதற்காக நாங்கள் எங்களது விநியோகிப்பாளருடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். உணவுத்தரத்தைக் கட்டிக்காப்பது ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் தலையாய அக்கறை” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.