‘வேகக் கண்காணிப்புச்  சாதனங்கள் கட்டாயம் ஆக்கப்படாது’

ST PHOTO: ALPHONSUS CHERN

கனரக வாகனங்களில் உள்ள வேகக் கட்டுப்பாட்டுச் சாதனங்களுக்குப் பதிலாகவோ அவற்றுக்குக் கூடுதலாகவோ வேகத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள் பொருத்தத் திட்டமில்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் கூறினார்.
 கனரக வாகனங்கள் செல்லும் வேகத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள் ஒன்பது மாதங்களுக்கு முன்னோட்டச் சோதனையிடப்பட்டன. அதைத் தொடர்ந்து கண்டறியப்பட்ட முடிவுகள் குறித்தும் சாதனங்களைக் கட்டாயமாக்குவது குறித்தும் நீ சூன் குழுத் தொகுதியின் திரு லூயிஸ் இங் கேள்வி எழுப்பியிருந்தார். 30 கனரக வாகனங்களில் மூவகை வேகக் கண்காணிப்புச் சாதனங்கள் சோதனையிடப்பட்டன. சாதனங்கள் மிகத் துல்லியமானவையாக இருந்தபோதும் இவற்றுக்கு அதிகச் செலவாகுவதுடன் சாதனங்களை யாராவது எளிதில் மாற்றியமைக்கக்கூடிய தன்மையும் உள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது கனரக வாகனங்களில் உள்ள வேகக் கட்டுப்பாட்டுச் சாதனங்களைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இக்கண்காணிப்புச் சாதனங்களால் பயன்கள் இல்லை என்பதால் அவற்றின் பயன்பாட்டைக் கட்டாயமாக்கப் போவதில்லை என்று போக்குவரத்து போலிஸ் முடிவெடுத்துள்ளதாக திரு அம்ரின் கூறினார்.