பாலர் பள்ளியில் 31 பேருக்கு இரைப்பை குடலழற்சி; அதிகாரிகள் விசாரணை

‘டங்ளின் மைண்ட்சேம்ப்ஸ்’ பாலர் பள்ளியில் 31 பேருக்கு இரைப்பை குடலழற்சி தொற்றியுள்ள சம்பவத்தை அதிகாரிகள் தற்போது விசாரித்து வருகின்றனர். சுகாதார அமைச்சு, வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம் ஆகியவை இணைந்து இது குறித்த அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டன. நோய்வாய்ப்பட்டவர்களில் 30 பேர் பாலர் பள்ளியைச் சேர்ந்தவர்கள். 

இந்நோய் தொற்றியதற்கான அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடையே நேற்று நண்பகல் 12 மணிக்குக் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். இந்த 31 பேரில் இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

சம்பவத்தை அதிகாரிகளுடன் இணைந்து விசாரித்து வருவதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (இசிடிஏ) தெரிவித்தது. 

பாதிக்கப்பட்ட 30 பிள்ளைகளில் சிலர் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றனர். வேறு சிலர் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர். பள்ளியில் பணிபுரியும் ஒருவர் இன்னும் மருத்துவ விடுப்பில் உள்ளார்.

பாலர் பள்ளியின் வளாகத்தில் பல அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறினர். பள்ளிக்கு உணவு விநியோகம் செய்த நிறுவனமும் சோதனை செய்யப்பட்டது. விசாரணையின் ஓர் அங்கமாக, அந்த உணவைக் கையாண்டவரும் சோதிக்கப்பட்டார். அத்துடன், உணவு மற்றும் சுற்றுப்புற மாதிரிக்கூறுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.

‘மைண்ட்சேம்ப்ஸ்’ தனது மாணவர்களின் நலனை அதிமுக்கியமாகக் கருதுவதாக அதன் பேச்சாளர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார். விசாரணை நடத்தும் அதிகாரிகளுடன் அந்த பாலர் பள்ளி அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இம்மாதத்தின் முற்பகுதியில், தோ பாயோவிலுள்ள ‘ஸ்பார்க்கல்டாட்ஸ்’ பாலர் பள்ளியில் மூன்று வயதுக்கும் ஆறு வயதுக்கும் இடைப்பட்ட 14 பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டனர். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட அந்தப் பிள்ளைகளிடம் இரைப்பை குடலழற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்கப்பட்டது. 
கடந்த ஆண்டு, கற்றல் முகாம் ஒன்றில் ‘ஃபுட்டோக்ஸ் கேட்டரர் அன் மெனுஃபெக்சரர்’ (FoodTalks Caterer & Manufacturer) நிறுவனம் தயாரித்திருந்த உணவைச் சாப்பிட்ட 131 பேருக்கு இதே நோய் தொற்றியது. இந்நிறுவனத்தின் சமையலறையில் சுகாதார முறைகேடுகள் இருந்ததாக அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று நடைபெற்ற தேசின தின அணிவகுப்பின் கூட்டு ஒத்திகை யின்போது, தேசிய தின அணிவகுப்பு 2019 அணிவகுப்பு மற்றும் சடங்குபூர்வ அங்கங்கள் துணைக் குழுத் தலைவர் மூத்த லெஃப்டினண்ட் கர்னல் லோ வூன் லியாங் (நடுவில்), அணிவகுப்புத் தளபதி லெஃப்டினண்ட் கர்னல் எல்வின் சூ, அணிவகுப்பு ரெஜிமெண்டல் சார்ஜண்ட் மேஜர் மாஸ்டர் வாரண்ட் அதிகாரி சோங் வீ கியோங் ஆகியோருடன் அணிவகுப்பு பங்கேற்பாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

16 Jun 2019

அணிவகுப்பில் பங்கேற்கும் தொண்டூழியர் அணி