தரவரிசையில் சிறப்பாகச் செய்திருக்கும் என்யுஎஸ், என்டியு, எஸ்எம்யு

சிங்கப்பூரின் இரு முன்னணி பல்கலைக்கழகங்களான தேசியப் பல்கலைக்கழகமும் (என்யுஎஸ்) நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) அனைத்துலகத் தரவரிசை பட்டியல் ஒன்றில் சிறப்பிடங்களைப் பிடித்துள்ளன.

பாடங்களின் அடிப்படையில் அனைத்துலகப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசையிடும் பட்டியலை ‘குவாக்குவாரெல்லி சைமண்ட்’ என்ற பிரிட்டிஷ் கல்வி நிறுவனம் இன்று (பிப்ரவரி 27) வெளியிட்டிருக்கிறது.

பட்டியலின்படி, சிங்கப்பூரில் கற்பிக்கப்படும் 14  பல்கலைக்கழகப் பாடங்கள் அனைத்துலக அளவில் சிறந்த 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இது, சீனா (நான்கு பாடங்கள்) ஹாங்காங் (மூன்று பாடங்கள்) ஜப்பான் (மூன்று பாடங்கள்) ஆகிய நாடுகளின் மொத்த எண்ணிக்கையைவிட அதிகம்.

இந்த 14 பாடங்களில் ஒன்பது என்யுஎஸ்ஸையும் ஐந்து என்டியுவையும் சேர்ந்தவை. 

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் (எஸ்எம்யு) வர்த்தகம் மற்றும் நிர்வாகத்திற்கான கல்வியில் 41ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலின் சிறந்த 50 இடங்களில் எஸ்எம்யு இடம்பிடித்திருப்பது இதுவே முதல்முறை.