பெண்ணை மானபங்கம் செய்த இளையருக்கு 15 மாதக் கண்காணிப்பு

‘செந்தோசா கோவ்’ ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின்போது ஒரு பெண்ணை மானபங்கம் செய்த ஆடவருக்கு 15 மாத நன்னடத்தை கண்காணிப்பு விதிக்கப்பட்டது.

ஆணழகராகப் பணிபுரியும் 21 வயது கைல்ஸ் அகின்கும்னி ஜக்தீஷ் மானபங்கம் செய்ததாகக் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். அவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். 

நன்னடத்தை கண்காணிப்பின் நிபந்தனைகளின்படி அவர் ஒவ்வொரு நாளும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே செல்லாமல் இருக்கவேண்டும். மேலும் அவர் 100 மணி நேரத்திற்கு சமூக சேவை செய்யவேண்டும்.

கைல்ஸின் நன்னடத்தையை உறுதிசெய்ய அவரது உறவினருக்கு $5,000 முறி விதிக்கப்பட்டது.

‘ஒன்15 மரினா செந்தோசா கோவ்’ கேளிக்கை கூடத்தின் நீச்சல் குளத்தில் மானபங்கம் செய்யப்பட்ட பெண்ணும் அவரது தோழியும் இருந்தபோது அருகில் கைல்ஸ் இருந்ததைக் கண்டனர். பெண்ணின் தோழி கைல்ஸை தெரிந்துகொள்ள ஆசைப்படுவதாக அந்தப் பெண்ணிடம் தெரிவித்தார். ஆயினும் அந்தத் தோழி இறுதியில் கைல்ஸிடம் பேசாமல் இருந்தார். 

பின்னர் இருவரும் டாக்சி நிறுத்தத்தில் டாக்சிக்காகக் காத்திருந்தனர். பெண்ணின் தோழி முதலில் டாக்சியை எடுத்து அங்கிருந்து சென்றார். தனியாக இருந்த அந்தப் பெண் அங்கு காத்திருந்தபோது கைல்ஸை கண்டார். கைல்ஸ் அந்தப் பெண்ணிடம் சிகரெட் ‘லைட்டர்’ இருக்கிறதா எனக் கேட்டார். அதற்கு இல்லை என்று பதிலளித்த பெண், அவருடன் பேச்சு கொடுக்கத் தொடங்கினார். கைல்ஸுடன் ‘செல்ஃபி’ படம் ஒன்றை எடுத்த அந்தப் பெண், அதனைத் தனது தோழிக்கு அனுப்பினார்.

கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாம் ஒரு வீட்டுக்குப் போவதாகக் கூறிய கைல்ஸ், தன்னுடன் வருமாறு அந்தப் பெண்ணிடம் கேட்டார். தனக்கு விருப்பமில்லை என்று பதிலளித்த அந்தப் பெண், சம்பவ இடத்தைவிட்டுச் செல்ல முயன்றபோது கைல்ஸ் திடீரென அவரைக் கையால் இழுத்து மானபங்கம் செய்தார். சுமார் மூன்று விநாடிகளுக்கு மானபங்கம் நீடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மானபங்கக் குற்றத்திற்காக கைல்ஸுக்கு ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.