பாகிஸ்தானிய வான்வெளியைத் தவிர்க்க எஸ்ஐஏ விமான பாதைகளில் மாற்றம்

பாகிஸ்தானின் வான்வெளியைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமான நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்தது மூன்று விமானங்களின் பயணப் பாதைகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மூன்று விமானங்களில் இரண்டு லண்டனை நோக்கியும் ஒன்று ஜெர்மனியை நோக்கியும் இன்று ( பிப்ரவரி 27) சென்று கொண்டிருந்தபோது அவை டெல்லி, துபாய் ஆகிய நகரங்களின் விமான நிலையங்களுக்குத் திசை திருப்பப்பட்டன. டெல்லி, துபாய் விமான நிலையங்களில் அந்த விமானங்களுக்கு எண்ணெய் நிரப்பப்பட்டதாக எஸ்ஐஏ தெரிவித்தது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரித்துவரும் வேளையில் எஸ்ஐஏ விமானங்களின் பயணப் பாதைகள் மாற்றப்பட்டுள்ளதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்தது.

விமானங்கள் செல்லும் பாதைகள் மாற்றப்பட்டதால் பயண நேரம் அதிகரித்ததாக எஸ்ஐஏ கூறியது. மும்பைக்கும் வட இந்தியாவிலுள்ள அமிர்தசரஸ் நகருக்குமான தனது விமானப் பயணங்கள் அனைத்தையும் ‘ஸ்கூட்’ நிறுவனம் ரத்து செய்திருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றநிலை அதிகரித்துவருவது கவலைக்குரியது என்று தெரிவித்த சிங்கப்பூர், இரு நாடுகளையும் தங்களது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டுக்கொண்டது. அவசியமில்லாமல் பாகிஸ்தானுக்கும் ஜம்மூ-காஷ்மீருக்கும் செல்லவதைத் தவிர்க்குமாறு அமைச்சு ஆலோசனை வழங்கியது.