‘பொருள் சேவை வரியைச் சற்று தாமதித்து உயர்த்தலாம்’  

பொருள் சேவை வரியை 2021ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு விழுக்காடு அரசாங்கம் உயர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், இதை முடிந்தவரை காலந்தாழ்த்திச் செய்யலாமே என வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் ஃபூ மீ ஹார் (படம்) கோரினார்.
சிங்கப்பூரில் 2016ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட $15 பில்லியன் உபரி நிதி சேர்ந்துள்ள நிலையில் 7 விழுக்காடாக உள்ள பொருள் சேவை வரியை 9 விழுக்காடாக்கும் திட்டத்தைத் தாமதிக்குமாறு அவர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். 
ஒவ்வோர் அரசாங்கமும் தன் தவணை முடியும்போது பயன்படுத்தாமல் போகும் உபரிப் பணம் இருப்பு நிதியாக மாற்றிடும். அத்துடன் நாட்டின் நிதி நிர்வாகம் அனுமதித்தால் இந்த உபரியை சிங்கப்பூரர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்ற ஆலோசனையையும் அவர் கூறினார். 
அதற்கு இவ்வாண்டின் $1.1 பில்லியன் மதிக்கத்தக்க இருநூற்றாண்டு நிறைவு போனசை திருவாட்டி ஃபூ உதாரணம் காட்டினார். இத்தகைய பலன்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்வதைவிட வேறு சிறந்த முறையில் சமூக ஒருங்கிணைப்பை வளர்க்க முடியாது என்றார்.