‘டோட்டலி டிவோட்டட்’ பிஸ்கெட்டுகள் மீட்பு

‘டோட்டலி டிவோட்டட்’ நிறுவனத்தின் ‘ஃபீடிங் குக்கீஸ் வித் சாக்லட் சிப்ஸ்’ பிஸ்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவித்தது. 

இந்த பிஸ்கெட்டுகளுக்குள் பால் மூலப்பொருளாகச் சேர்க்கப்பட்டதாகவும் பிஸ்கெட் பொட்டலங்களில் எழுதப்பட்டுள்ள மூலப்பொருள் பட்டியலில் அது இடம்பெறவில்லை என்றும் நியூசிலாந்தின் வேளாண்மை துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து இந்த பிஸ்கெட் மீட்கப்படவேண்டும் என்று ஏவிஏ, ‘டோட்டலி டிவோட்டட்’ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

காலாவதி தேதி கருத்தில் கொள்ளப்படாமல் அனைத்து பிஸ்கெட்டுகளும் மீட்கப்பட்டு வருகின்றன.

பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த பிஸ்கெட்டைச் சாப்பிடக்கூடாது என்று ஏவிஏ தெரிவித்தது. அதனைச் சாப்பிட்டவர்கள் மருத்துவரை நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பிஸ்கெட்டை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதன் இறக்குமதியாளரை https://www.pupsikstudio.com/customer-support/contact-us.html என்ற இணைய முகவரி வழியாகத் தொடர்புகொண்டு பிஸ்கெட்டைத் திருப்பிக் கொடுப்பது குறித்து மேலும் தகவல் பெறலாம்.