அவசியமில்லாத பாகிஸ்தான் பயணங்களைத் தவிர்க்க வெளியுறவு அமைச்சு ஆலோசனை

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றநிலை அதிகரித்துவருவது கவலைக்குரியது என்று தெரிவித்த சிங்கப்பூர், தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டது.

அவசியமில்லாமல் பாகிஸ்தானுக்கும் ஜம்மு-காஷ்மீருக்கும் செல்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் ஆலோசனை வழங்கியது.

“நிச்சயமில்லாத பாதுகாப்புச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பயணிகள் மற்ற இடங்களிலும், குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில், மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்,” என்று வெளியுறவு அமைச்சு கூறியது.

புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட பல இந்திய நகரங்கள் உச்ச விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேஷ், ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.

பாகிஸ்தானின் வான்வெளிக்குள் பயண விமானங்கள் செல்ல முடியாது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. 

“இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தற்போது இருக்கும் சிங்கப்பூரர்கள் தங்களது சொந்த பாதுகாப்பை உறுதி செய்ய ஆன அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் விழிப்புடன் இருந்து, ஊடகங்களின் வழி நிலவரத்தைக் கண்காணித்து உள்நாட்டு அதிகாரிகளின் ஆலோசனையின்படி நடந்துகொள்ளவேண்டும்,” என்றது அமைச்சு.

சிங்கப்பூரர்கள் தங்களது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் தொடர்பில் இருந்து தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியது.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சின் இணையத்தளத்தில் (https://eregister.mfa.gov.sg) தங்களது விவரங்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உதவி தேவைப்படும் சிங்கப்பூரர்கள் புதுடெல்லியிலுள்ள சிங்கப்பூர்த் தூதரகத்தை +91-11-4600-0800 மற்றும் +91-98102-03595 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கலாம் அல்லது singhc_del@mfa.sg மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ளலாம்.

பாகிஸ்தானில் சிங்கப்பூர் கௌரவத் துணைத் தூதரை (Singapore Honorary Consulate-General)  +92-21-3568-6419 மற்றும் +92-21-3568-5308 எண்களில் அழைக்கலாம் அல்லது singaporecg@cyber.net.pk. என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ளலாம்.

24 மணி நேரமும் இயங்கும் வெளியுறவு அமைச்சின் அலுவலகத்துடன் +65-6379-8800 மற்றும் +65-6379-8855 தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.