வர்த்தகப் போரின் தற்காலிக நிறுத்தத்தால் சிங்கப்பூர் வெள்ளி ஆதாயமடையலாம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரின் தற்காலிக நிறுத்தத்தால் ஆதாயமடையும் ஆசிய நாட்டு நாணயங்களில் சிங்கப்பூர் வெள்ளியும் ஒன்று.

சிங்கப்பூர் வெள்ளிக்கும் சீனாவின் யுவான் நாணயத்திற்கும் வலிமையான தொடர்பு இருப்பதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது. சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களில்  கிட்டத்தட்ட 41 விழுக்காடு, சீனாவின் அக்கரை நாணய மதிப்பில்  ஏற்பட்ட மாற்றங்களால் நிகழ்ந்தவை என்று புளூம்பர்க் கூறியது.

ஜனவரியில் சிங்கப்பூரின் ஏற்றுமதிகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்ததற்கு அமெரிக்க-சீன வர்த்தகப் பதற்றநிலை முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

“சிங்கப்பூர் வெள்ளியை உலகப் பொருளியல் பெருமளவு முன்னெடுத்துச் செல்கிறது,” என்று ஜப்பானியப் பொருளியல் நிபுணர் திரு டோரு நி‌ஷிஹமா தெரிவித்தார்.