நிதியமைச்சர் ஹெங்: பொருள் சேவை வரியை உயர்த்துவதில் நிதானம் கடைபிடிக்கப்படும்

பொருள், சேவை வரியை 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு உயர்த்துவதற்கான சரியான நேரத்தை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் வியாழக்கிழமை தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளியல் சூழல், மக்கள் செலவு செய்யும் விதம், நாட்டின் வருவாய் ஆகியவற்றை அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வரும் என்று திரு ஹெங் நாடாளுமன்றத்தில் கூறினார். 

ஜிஎஸ்டி உயர்வு தொடர்பான அணுகுமுறையையும் அதனைச் செயல்படுத்துவதற்கான நேரத்தையும் குறித்து சிலர் கேள்வி எழுப்பியதாகத் திரு ஹெங் தெரிவித்தார். கடந்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஜிஎஸ்டி உயர்வு அறிவிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையே ஜிஎஸ்டி உயர்வு செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரி உயர்வை முடிந்தவரை தாமதப்படுத்துமாறு வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி ஃபூ மீ ஹார் கேட்டிருந்தார். ஆயினும் சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதியைத் பெற இந்த வரி உயர்வு தேவை என்று திரு ஹெங் பதில் அளித்தார். இது எளிதான முடிவு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

2019ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சு நோயாளிகளின் கட்டணத்திற்கான விலைக்கழிவுகளுக்கு மட்டும் 6.1 பில்லியன் வெள்ளி செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.