‘மூத்தோர் தனியாக வீடுகளை வாடகைக்கு எடுக்க அனுமதியுங்கள்’      

மவுண்ட் பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரே வீட்டில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிள்ளைகளுடன் ஒத்துப்போக முடியாத மூத்தோர், அவர்களைவிட்டு பிரிந்து தனியாக வாழ விரும்புவதாக தொகுதி குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் அமர்வுகளில் தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக மவுண்ட் பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியாவ் சுவான் நாடாளுமன்றத்தில் கூறினார்.
எனினும், கட்டணக் கழிவுடன் கூடிய வீடுகளைத் தனியாக வாடகைக்கு எடுக்க தற்போதைய கொள்கைகள் அனுமதிப்பதில்லை. குடும்பங்கள் தங்கள் மூத்த உறுப்பினர்களைக் கவனித்துக்கொள்வதே சிறப்பு என்று அனைவரும் விருப்பப்பட்டாலும் உறவுகள் எப்போதும் சுமூகமாக இருப்பதில்லை என்பதே நிதர்சனம் என்றார் அவர். “சூழ்நிலை அடிப்படையில் ஓரறை வீட்டை மூத்தோர் வாடகைக்கு எடுக்க அரசாங்கம் அனுமதிக்குமா?” என்று திரு லிம் வினவினார். இதன் மூலம் ஓய்வுகாலத்தில் ஒத்துவராத குடும்பச் சூழலில் வசிப்பதைவிட மூத்தோர் கண்ணியத்துடன் வாழ முடியும் என்றார் அவர்.