அமைச்சர் சான்: பதவி நியமனத்தில் முரண்பட்ட நிலை இல்லை

அரசாங்கத் தலைமைக் கணக்காய் வாளர் நியமனத்தில், கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பட்ட நிலை இல்லை என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் 
சுன் சிங் (படம்) நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார். 
பொதுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான அவர், முக்கிய அரசமைப்பு நியமனங்களுக்குப் பொருத்தமானவர்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுகின்றனர் என்பதை விளக்கினார். 
அண்மையில் நியமிக்கப்பட்ட அரசாங்கத் தலை மைக் கணக்காய்வாளர், மூத்த துணை அமைச்சர் ஒருவரின் மனைவியா என்பதை அரசாங்கம் உறுதி செய்யுமாறு பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் கேட்டுக்கொண்டதற்கு திரு சான் இதனைத் தெரிவித்தார்.
திருமதி சில்வியா பெயர் குறிப்பிடாவிடிலும், இம்மாதத் தொடக்கத்தில் பதவியேற்றுக்கொண்ட திருமதி கோ சூன் போ, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ்வின் மனைவியாவார். 

திரு ஹெங்கும் திருமதி கோவும் கணவன், மனைவி என்பது பொதுத்துறைக்கு தெரியும் என்பதைத் திரு சான் உறுதிப்படுத்தினார்.
பொதுத்துறைப் பிரிவின் பண்புநெறிகளான நேர்மையும் உன்னதமும், பதவி நியமன நடைமுறையில் சமமாகப் பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பதவிகளை வகிப்பதற்கான தகுதிகூறுகள் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். “பொதுவாக ஒருவரை குறிப்பிட்ட பதவிக்கு தேர்வு செய்வ தில் வேலையைச் சிறப்பாக செய்வதற்குரிய அவரது ஆற்றல், கல்வி, அனுபவம், நேர்மை, பொதுத்துறை உணர்வு உள்ளிட்ட அம்சங்கள் கருத்தில்கொள்ளப்படும்,” என்று திரு சான் விளக்கினார்.
அவ்வகையில் பிரதமர், பொதுத்துறை ஆணையம் வழங் கும் ஆலோசனையின் பேரில் அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரை அதிபர் நியமிப்பார் என்று அவர் சொன்னார்.