தற்காப்பு அமைச்சர்: நான்கு எஃப்-35 போர் விமானங்கள் வாங்கப்படும்

சிங்கப்பூர் நான்கு ‘எஃப்-35 ஜாயிண்ட் ஸ்டிரைக் ஃபைட்டர்’ (ஜேஎஸ்எஃப்) ரக போர் விமானங்களை அமெரிக்காவிலிருந்து தருவிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார். தொடக்கமாக நான்கு ‘எஃப்-35 ஜேஎஸ்எஃப்’  போர் விமானங்களைப் பெறுவதற்கான வேண்டுகோள் கடிதம் ஒன்று அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டாக்டர் இங், தற்காப்பு அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டார். மேலும் எட்டு போர் விமானங்களை வாங்குவதற்கான தெரிவுக்கும் டாக்டர் இங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விமானங்களை வாங்குவது குறித்த சிங்கப்பூரின் திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கமும் தற்காப்புத் துறையும் ஒப்புதல் அளித்திருப்பதாக டாக்டர் இங் கூறினார். சிங்கப்பூரின் இந்தத் திட்டத்தை வரவேற்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரதமர் லீ சியன் லூங்கிடம் கடிதம் வழி தெரிவித்ததை டாக்டர் இங் சுட்டினார். 

“தற்காலிக தற்காப்பு அமைச்சர் பேட்ரிக் ஷனஹானை இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் சந்தித்தேன். சிங்கப்பூரின் முடிவை அமெரிக்கா பெரிதும் பாராட்டுவதாக அவர் கூறினார்,” என்றார் டாக்டர் இங்.

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட பத்து நாடுகள் ‘எஃப்-35 ஜேஎஸ்எஃப்’ விமானங்களை வாங்கி வருவதால் அவற்றின் விலை குறைந்து வருவதாக அவர் சொன்னார். தற்போது ‘எஃப்-35 ஜேஎஸ்எஃப்’ விமானத்தின் விலை 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் 115 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் இடைப்பட்டிருக்கிறது. 

‘எஃப்-35 ஜேஎஸ்எஃப்’ விமானப் படையின் பராமரிப்புக்கான மொத்த செலவு, சிங்கப்பூர் ஆகாயப்படையின் வசமுள்ள ‘எஃப்-15’ படைகளுக்கு நிகரானது என்று டாக்டர் இங் கூறினார். செலவை முழுமைப்படுத்த அமெரிக்காவின் தற்காப்புத் துறையுடன் சிங்கப்பூர் ஒத்துழைக்கும் என்றும் அவர் சொன்னார்.

வெளிநாட்டு ராணுவ விற்பனைகளுக்கான அமெரிக்கச் சட்டங்களின்படி, அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ‘எஃப்-35 ஜேஎஸ்எஃப்’ விமானத்தின் விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றார் டாக்டர் இங்.