அமைச்சர் சண்முகம்: உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தடுக்க சட்டங்கள் வலுப்படுத்தப்படும்

சிங்கப்பூரின் உள்நாட்டு அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டைத் தடுப்பதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் அந்தச் சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று (மார்ச் 1) தெரிவித்தார்.

உள்துறை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின்போது பேசிய திரு சண்முகம், வெளிநாடுகளின் தலையீட்டால் ஏற்பட்டுள்ள தாக்கம் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார்.

நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவும் நேரத்தில் சில இயக்கங்கள் பகைமையை வளர்க்கும் நோக்கத்துடன் தகவல்களை பரப்பி வருவதாகத் திரு சண்முகம் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தையும் தேர்தல்களையும் பலவீனப்படுத்த வெளிநாட்டுத் தரப்புகள் முயன்றுள்ளதாக அவர் கூறினார். இதனால் நாடு பிளவுபடுவதுடன் சமூக கட்டமைப்பு பாதிக்கப்படலாம் என்றார் திரு சண்முகம்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கேள்விகளுக்குப் பதிலளித்த திரு சண்முகம், சிங்கப்பூரின் சமய நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் மூன்று கவலைக்குரிய போக்குகளைச் சுட்டினார்.

அடையாள அரசியலின் எழுச்சியால் இனம், கலாசாரம், சமயம் ஆகிய குறுகிய பிரிவுகளின் கீழ் மக்கள் தங்களை அடையாளப்படுத்தி, இதனால் பன்முகத்தன்மையையும் மற்றவர்களுடன் அமைதியாக வாழும் வாழ்க்கை முறையையும் நிராகரித்து வருவது முதல் போக்கு. வேகமாகப் பரவும் வெறுப்புணர்வுகளைத் தூண்டும் பேச்சுகளின் பரவலுக்கு இணையம் கைகொடுப்பது, பயங்கரவாத சாயலைக் கொண்ட சமய சித்தாந்தங்களைப் பின்பற்றும் அமைப்புகள் சமுதாயத்தில் பிரிவினைகளை வளர்ப்பது ஆகியவை மற்ற இரண்டு போக்குகள். 

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க வலுவான சிங்கப்பூர் அடையாளம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று திரு சண்முகம் தெரிவித்தார். இந்த அடையாளம் சமய அடையாளத்தைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் நிகழ்ந்த கலந்துரையாடல்களைப் பற்றிய விரிவான செய்தி அறிக்கை நாளைய ( மார்ச் 2) தமிழ் முரசு இதழில் நீங்கள் காணலாம்.