இணையவழி காதல் மோசடி:  $27.5 மி. இழப்பு

கடந்த ஆண்டு பதிவான இணையவழி காதல் மோசடிப் புகார்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றில், ஆடம்பரப் பொருட்கள் அல்லது பணம் அடங்கிய பொட்டலங்களை அனுப்பி இருப்பதாகச் சொல்லி மோசடிக்காரர்கள் ஏமாற்றிப் பணம் பறித்ததாக போலிஸ் தெரிவித்துள்ளது.
இணையவழி காதல் மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த ஆண்டில் குறைந்தது $27.5 மில்லியனை இழந்தனர்.  மொத்தம் பதிவான 660 மோசடிப் புகார்களில் 59% பொட்டலங்கள் தொடர்பானவை எனக் கூறப்பட்டது.
தங்களின் வலையில் சிக்கியவர்களை மோசடிக் காரர்களின் கூட்டாளிகள் தொடர்புகொண்டு, தாங்கள் அனுப்பிய பொட்டலங்களை அதிகாரிகள் சோதனைக்காக தடுத்துவைத்துள்ளதாகக் கூறுவர். அதன்பின் மோசடிக் காரர்கள் தூதஞ்சல் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லது அரசாங்க அதிகாரிகள் போல நடித்து, வரி, அபராதம் போன்ற காரணங்களைக் கூறி பணம் கறப்பர். அப்படி பணம் அனுப்பத் தவறினால் தண்டனைக்கு ஆளாகலாம் என்றும் அவர்கள் மிரட்டுவர்.
இத்தகைய மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கி ஏமாறாமல் கவனமாக இருக்கும்படி பொதுமக்களுக்கு போலிஸ் அறிவுறுத்தியுள்ளது.