ஆரோக்கியம், மகிழ்ச்சி: பெரிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய சிங்கப்பூர்

லண்டன்: சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் உலகச் சுகாதாரப் பட்டியல்களில் முதன்மை பெறுகின்றன. வேகமாக வளரும் பொருளியல்களைக் கொண்ட பெரிய நாடுகளோ பின்தங்கிய நிலையில் உள்ளன.

எந்த நாடுகளில் மக்கள் அதிக ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி ஆகியவற்றுடன் இருக்கிறார்கள் என்பதை உலகளாவிய வாழ்க்கைத் தரநிலை ஆய்வு ஒன்று காட்ட முற்பட்டது.

‘லெட்டர்ஒன்’ என்ற முதலீட்டு நிறுவனம் பதிப்பிட்ட ‘ஜீடபள்யூஐ’ உலகளாவிய நல குறியீட்டில், 151 நாடுகளைக் கொண்டுள்ள தரவரிசைப் பட்டியலில் கனடா முதல் இடம் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலின் சிறந்த பத்து இடங்களில் ஆசிய நாடுகள் இடம்பெறுகின்றன: பிலிப்பீன்ஸ் (நான்காம் இடம்), மாலத் தீவுகள் (ஐந்தாம் இடம்), சிங்கப்பூர் (ஏழாம் இடம்), லாவோஸ் (எட்டாம் இடம்), தென்கொரியா (ஒன்பதாம் இடம்), கம்போடியா (பத்தாம் இடம்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா இந்தப் பட்டியலில் 37ஆம் இடத்தில் உள்ளது.

சுகாதாரத் துறைக்கான அரசாங்கத்தின் செலவினம், மன அழுத்த விகிதம், மதுபானப் பயன்பாடு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றுக்கான விகிதங்கள் ‘ஜீடபள்யூஐ’ குறியீட்டை கணிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.