‘ஹவுஸ் பிராண்ட்’ பாஸ்மதி பிரியாணி அரிசிப் பையில் இறந்து கிடந்த எலி

‘ஹவுஸ் பிராண்ட்’ பாஸ்மதி பிரியாணி அரிசிப் பை ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் மாண்ட எலி ஒன்றைக் கண்டதை அடுத்து ‘ஷெங் ‌ஷியோங்’  பேரங்காடி அந்த பிரியாணி அரிசிப் பொட்டலங்களைத் தனது கடைகளிலிருந்து அகற்றியுள்ளது.

திரு விக்னேஷ் ஜோதிமணி என்ற அந்த வாடிக்கையாளர், பிரியாணி அரிசி பையை பிடோக் ரிசர்வாயர் ரோட்டிலுள்ள கடையிலிருந்து கடந்த சனிக்கிழமை அன்று (மார்ச் 2) வாங்கியதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம்  தெரிவித்தார். பையைத் திறந்து பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டார். அரிசிப் பைக்குள் எலி இறந்து கிடந்ததைக் காட்டும் படம் ஒன்றைத் திரு விக்னேஷ் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அதே நாளில் வெளியிட்டார். இது பற்றி வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையத்திடம் (ஏவிஏ) தெரிவித்ததாகவும் அவர் கூறினார். அவரது ஃபேஸ்புக் பதிவு 3,100 முறைக்கு மேல் பகிரப்பட்டது.

இந்தச் சம்பவத்தைப் பற்றி வாடிக்கையாளர் ‘ஷெங் ‌ஷியோங்’ பேரங்காடியிடம் தகவல் கொடுத்ததாக அதன் பேச்சாளர் ஒருவர் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தார். ‘ஹவுஸ் பிராண்ட்’ பாஸ்மதி பிரியாணி அரசிப் பொருட்கள் அனைத்தும் தனது பேரங்காடிக் கிளைகளிலிருந்து அகற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். அரிசி விநியோகிப்பாளர் நடந்ததை விசாரித்து வருவதாக அந்தப் பேச்சாளர் சொன்னார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாக ஏவிஏ தெரிவித்தது.