ஆவணங்களை மின்னிலக்கமயமாக்கும் புதிய திட்டத்தை சிங்கப்பூர் தொடங்கும்

காதிகங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டணக் குறிப்புகளை மின்னிலக்கமயமாக்கும் திட்டம் இவ்வாண்டின் பிற்பகுதியில் சோதிக்கப்படும். சரக்குக் கப்பல்களின் தாமதத்தைக் குறைப்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். அத்துடன், மின் கட்டணக் குறிப்புகளை உலக தரநிலைகளுக்கு  உட்படுத்துவதற்காக மின்னிலக்கப் பரிவர்த்தனைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும். 

இந்த இரண்டு நடவடிக்கைகளின் மூலம் வட்டாரத்தின் கடல்துறையில் மின் ஆவண முறை அதிக அளவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த மாற்றங்களால் வர்த்தகச் செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காகிதங்களின் பயன்பாட்டால் மோசடிகள் ஏற்படும் அபாயம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘டிரேட்டிரஸ்ட்’ என்ற அந்தத் திட்டத்தை தொடர்பு, தகவல் அமைச்சர் திரு எஸ். ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். அவர் தமது அமைச்சுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து பேசுகையில் “டிரேட்டிரஸ்ட் திட்டத்தால் வர்த்தகர்களின் பார்வையில் சிங்கப்பூரின் கவர்ச்சி அதிகரிக்கும். சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் தளவாடத் துறைகளை டிரேட்டிரஸ்ட் மேம்படுத்தும். தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையமும் மற்ற அரசாங்க அமைப்புகளும் இணைந்து செயல்பட்டு இதன் தொடர்பில் மேலும் பல சோதனைகளை நடத்தும்,” என்றும் அவர் கூறினார்.

கடல்துறை வர்த்தகச் சட்டத்தில் பல்வேறு நுணுக்கங்கள் இருப்பதால் ஒரு பரிவர்த்தனைக்கு நூற்றுக்கணக்கான ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றன. வர்த்தக ஆவணங்களுக்குத் தேவைப்படும் சரிபார்த்தல், நிர்வாகம் ஆகியவற்றால் சரக்குப் பெட்டி ஒன்றை கப்பலில் அனுப்பும் செலவு 20 விழுக்காடு கூடுகிறது.

புதிய முயற்சிக்காக ‘ஐம்டிஏ’யுடன் கடல்துறை, துறைமுக ஆணையம், சிங்கப்பூர் சுங்கத்துறை, சிங்கப்பூர் கப்பல்துறை சங்கம் ஆகியவை இணைகின்றன. இது குறித்த கருத்துத்திரட்டு நிகழ்ச்சிகளை ‘ஐம்டிஏ’ நடத்த உள்ளது.