வீவக கார் நிறுத்தத்திற்கு மேல் பண்ணையில் நான்கு டன் காய்கறிகளை வளர்க்க திட்டம்

அங் மோ கியோவில் ‘சிட்டிபோனிக்ஸ் பார்ம்’ என்ற பண்ணையில் கிட்டத்தட்ட 1,600 பேருக்கு போதுமான அளவுக்கு காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.1800 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்த காய்கறிப் பண்ணை     அங் மோ கியோ அவென்யூ 6 புளோக் 700லுள்ள பல மாடி வீவக கார் நிறுத்துமிடத்தின் கூரையின்மீது அமைந்துள்ளது. மாதத்திற்கு நான்கு டன் காய்கறிகளை வளர்ப்பது இந்தப் பண்ணையின் இலக்கு.  ‘அக்குவா ஆர்கானிக்’ முறையைப் பயன்படுத்தி இந்நிறுவனம் காய்கறிகளை வளர்க்கிறது. இம்முறையின்படி ஊட்டச் சத்துக்கள் கலந்த தண்ணீர், குழாய்க் கட்டமைப்பின் வழியாக தொடர்ந்து பாய்ச்சப்பட்டு வருகிறது. இந்தக் குழாய்களில் வெட்டப்பட்டிருக்கும் ஓட்டைகளில் சின்னஞ்சிறு களிமண் கற்கள் நிரப்பப்பட்டுள்ளன. அங்கு விதைக்கப்படும் விதைகள் செடிகளாக வளர்கின்றன.

இந்தப் பண்ணையில் கிட்டத்தட்ட 25 வகைக் காய்கறிகள் வளர்க்கப்படுகின்றன. இது குறித்து வர்த்தக, தொழில் மூத்த துணையமைச்சர் கோ போ கூன் கூறுகையில், “ வீவக பல மாடி கார் நிறுத்தத்தின் மீது நகர்ப்புற வர்த்தகப் பண்ணைக்கான திட்டத்தை நாங்கள் முதன்முதலாக சோதிக்கிறோம். வேளாண்மை, தொழில்நுட்பத் துறையை ஆதரிப்பதற்காக வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையம், வீடமைப்பு வளர்ச்சி கழகம் ஆகிய அமைப்புகள் எடுத்துள்ள நீக்குப்போக்கை இந்த முயற்சி காட்டுகிறது” என்றார்.

“பிப்ரவரி 2019ஆம் ஆண்டில் காய்கறி விதைகள் நடப்பட்டன. ஏப்ரல் முதல் அவற்றின் அறுவடையை எதிர்பார்க்கலாம். எனவே சமூகத்தினரால் சமூகத்தினருக்கிடையே சமூகத்தினருக்காக வளர்க்கப்பட்ட பசுமையான காய்கறிகளை வட்டாரவாசிகள் கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்,” என்று அவர் கூறினார். ‘சிட்டிபோனிக்ஸ்’ பண்ணையில் சிங்கப்பூரர்கள் வேலையில் சேர்க்கப்படுவர். ஏவா மூத்த சமூக இல்லத்தைச் சேர்ந்த மூத்த குடியிருப்பாளர்களும் இந்தப் பண்ணையில் வேலை செய்வர். மாணவர்களுக்கு வேலை பயற்சிகளையும் தொண்டூழிய வாய்ப்புகளையும் இந்தப் பண்ணை வழங்கவுள்ளது. இந்தப் பண்ணையில் விளையும் காய்கறிகள் அங் மோ கியோ ஹப்பிலுள்ள என்டியுசி பேரங்காடியில் விற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.