மாரடைப்பால் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்றிய விமான நிலைய அதிகாரி

சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஃபெரோஸ் கான் பணியில் இருந்தபோது மூச்சு வாங்கத் திணறிக்கொண்டிருந்த ஆடவர் ஒருவரைக் கண்டார். திரு ஃபெரோஸ் உடனே மற்ற பணியாளர்களை உதவிக்காக அழைத்தார். 

அந்த ஆடவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்ததாகப் பின்னர் தெரிய வந்தது. உடனே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவரது உறவினர்களுடன் தொடர்புகொள்ள அதிகாரிகள் சுமார் 15 மணி நேரம் முயன்றனர். இறுதியில் அந்த ஆடவர் குணமடைந்தார்.

இந்த உதவிக்காக திரு ஃபெரோஸுக்கும் அவரது ஆறு வேலைச்சகாக்களுக்கும் சாங்கி விமான நிலையத்தின் வருடாந்திர கொண்டாட்ட விழாவின்போது ‘சிறந்த நட்சத்திர சேவைக்குழு’ விருது வழங்கப்பட்டது. இதுபோல் 25 விருதுகள் சிறந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. போக்குவரத்து, சுகாதார மூத்த துணையமைச்சர் லாம் பின் மின் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

சாங்கி விமான நிலையத்தின் வெற்றிக்கு அதன் ஊழியர்கள் மிக முக்கியம் என்று விமான நிலையக் குழுமத்தின் தலைமை நிர்வாகி லீ சியாவ் ஹுவாங் தெரிவித்தார். விமான நிலையம் கடந்தாண்டு பயணிகளிடமிருந்து கிட்டத்தட்ட 45,000 பாராட்டுக் கடிதங்களைப் பெற்றிருப்பதாகவும் திரு லீ குறிப்பிட்டார்