உயர்நிலைப் பள்ளிகளில் தரம்பிரித்தல் முறை 2024ஆம் ஆண்டுக்குள் மாற்றப்படும்: கல்வியமைச்சு

உயர்நிலைப் பள்ளிகளில் விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) ஆகிய முறையிலான தரம்பிரித்தல் நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஓங் யி காங் அறிவித்திருக்கிறார். இந்த முறைக்குப் பதிலாக உயர்நிலை ஒன்று மாணவர்கள் பாட அடிப்படையில் தரம் பிரிக்கப்படுவர் என்று, நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற கல்வி அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது அவர் கூறினார்.

கணிதம் போன்ற பாடங்கள் ‘ஜி1’, ‘ஜி2’, ‘ஜி3’ ஆகிய நிலைகளில் கற்பிக்கப்படும். ‘ஜி1’, தற்போதுள்ள வழக்கநிலை (தொழில்நுட்பம்) பாடத்திற்கு ஏறக்குறைய இணையானது. ‘ஜி2’ மற்றும் ‘ஜி3’ முறையே வழக்கநிலை ஏட்டுக்கல்விக்கும் விரைவுநிலைக்கும் கிட்டத்தட்ட நிகரானவை.

புதிய முறையில் கற்கும் இந்த மாணவர்கள் 2027ஆம் ஆண்டில் உயர்நிலை நான்கிற்குச் செல்லும்போது, பொதுக்கல்விச் சான்றிதழ் ‘ஓ’ நிலை, ‘என்’ நிலை தேர்வுகளுக்குப் பதிலாகப் பொதுவான தேசிய தேர்வை எழுதுவர். அவர்களுக்கு ஒரே மாதிரியான உயர்நிலைப்பள்ளிச் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் திரு ஓங் கூறினார். சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டு வாரியமும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் இந்தப் புதிய சான்றிதழை இணைந்து வழங்கும் என்று அவர் தெரிவித்தார். “இவை இரண்டுமே கல்வித்துறையில் அனைத்துலக அளவில் நற்பெயரைப் பெற்றிருப்பதால் புதிய சான்றிதழின் மதிப்பும் அங்கீகாரமும் வலுவாக இருக்கும்,” என திரு ஓங் சொன்னார்.

புதிய ஏற்பாட்டுக்குப் பிறகு மாணவர்களைக் கல்வித் திறமையின் அடிப்படையில் பிரிக்காமல் மற்ற வழிகளின்மூலம் பகுக்க பள்ளிகள் முற்படவேண்டுமென கல்வி அமைச்சு விரும்புகிறது. இதனால் வெவ்வேறு நிலைகளில் இருக்கும் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகி உதவி செய்வதற்கான சூழல் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.