தீ விபத்து; பிடோக் வீவக அடுக்குமாடி புளோக்கிலிருந்து 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

பிடோக் நார்த் வட்டாரத்திலுள்ள வீவக அடுக்குமாடி வீடு ஒன்றில் தீ மூண்டதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 குடியிருப்பாளர்கள் அங்கிருந்து புதன்கிழமை ( மார்ச் 6) பிற்பகல் வெளியேற்றப்பட்டனர்.

180 பிடோக் நார்த் ரோட்டிலுள்ள அந்த அடுக்குமாடி புளோக்கிலிருந்து 18ஆம் மாடியில்   சுவாசக் கருவிகளை (breathing apparatus) அணிந்திருந்த தீயணைப்பாளர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உதவிக்கான அழைப்பு பிற்பகல் 1.20 மணிக்குக் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

தீப்பற்றக்கூடிய பொருட்கள் அந்த வீட்டுக்குள் அதிகம் இருந்ததால் வீடே தீப்பிழம்பாக மாறியதாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. புளோக்கின் 16ஆம் மாடி முதல் 20ஆம் மாடி வரை குடிமைத் தற்காப்புப் படையினர் கிட்டத்தட்ட 50 பேரை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றினர்.

தீச்சம்பவத்தில் எவரும் காயமடைந்ததாக இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.

வீட்டுக்குள் எரியக்கூடியப் பொருட்கள் அதிகமாக இருந்தால் தீ விபத்து சமயங்களில் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கான பாதைகளை அந்தப் பொருட்கள் மறைக்கலாம் என்று குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது. மேலும் அத்தகைய பொருட்கள் தீயணைப்பு முயற்சிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தலாம் என்றும் அது கூறியது. 

“தேவையில்லாமல் பழைய செய்தித்தாட்கள், அறைகலன்கள் மற்றும் துணிகள் அளவுக்கு அதிகமாக சேரவிடாமல் பார்த்துக்கொள்ள குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஏனெனில் இவை, எரியும் தீயைப் பெருக்கி உயிர், பொருள் சேதத்தை ஏற்படுத்தலாம்,” என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 

அடுக்குமாடி வீட்டின் உள்புறம் தீயால் பலமாக எரிக்கப்பட்டதைக் காட்டும் படங்கள் சில சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.