பிடிஓ குலுக்கலுக்கான நேரம் மூன்று வாரங்களுக்குக் குறைக்கப்படும்

தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளை வாங்க விரும்புவோருக்கான குலுக்கல் நேரம் ஆறு வாரங்களிலிருந்து மூன்று வாரங்களுக்குக் குறைக்கப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது. அத்துடன், மூன்று மாதங்களுக்குப் பதிலாக ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே வீவக தனது புதிய திட்டங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடும். வீடுகள் இருக்கும் இடம், அவற்றின் எண்ணிக்கை ஆகியவை அந்த விவரங்கள்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் இந்த மாற்றங்களை வியாழக்கிழமை (மார்ச் 7) அறிவித்தார். சிங்கப்பூர்களுக்குக் கட்டுப்படியாகும் விலைகளில் வீடுகள் கிடைக்கச்செய்யும் நீண்டகாலத் திட்டத்தில் இந்நடவடிக்கைகள் அங்கம் வகிப்பதாக அவர் கூறினார்.

இந்த மாற்றங்கள், வரும் மே மாதத்தின் விற்பனை நடவடிக்கைக்குப் பிறகு நடப்புக்கு வரும். வீடு வாங்குபவர்கள் பிடிஓ திட்டங்கள் பலவற்றைப் பார்த்து தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுப்பதற்குக் கூடுதல் கால அவகாசத்தைப் புதிய மாற்றங்கள் வழங்குகின்றன.