விவியன் பாலகிருஷ்ணன்: போக்குவரத்துக் கட்டமைப்புக்கான செலவைக் குறைக்க அரசாங்கம் முயல்கிறது

போக்குவரத்துக் கட்டமைப்புக்கான செலவு கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாக போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

போக்குவரத்துச் செலவு 2009ஆம் ஆண்டின் 5.4 பில்லியன் வெள்ளியிலிருந்து 2019ஆம் ஆண்டில் 11.5 பில்லியனுக்கு அதிகரித்தது என்று டாக்டர் பாலகிருஷ்ணன் சுட்டினார். தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை இவ்வாண்டின் இறுதியில் திறக்கும். இதனால் தற்போதைய எம்ஆர்டி கட்டமைப்பில் மேலும் 32 ரயில் நிலையங்களும் 43 கிலோமீட்டர் நீளமான தண்டவாளங்களும் சேர்க்கப்படும். இதனால் ஒரு மில்லியன் பயணிகள் பயனடைவர் என்று கூறப்படுகிறது.

“கிட்டத்தட்ட 2030க்குள் வட்டப்பாதையின் ஆறாவது கட்டம், ஜூரோங் வட்டார ரயில் பாதை, குறுக்கு ரயில் பாதை ஆகியவை திறக்கப்படும்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் மேலும் 200 ரயில்களை சேர்த்துள்ளோம். பேருந்து சேவை மேம்பாட்டுத் திட்டத்தின்கிழ் நாங்கள் இதுவரை  1,000க்கும் அதிகமான பேருந்துகளையும் அறிமுகம் செய்துள்ளோம்,” என்று அவர் சொன்னார்.

ஆனால் கொடுக்கப்பட்டுள்ள தொகையை முழுமையாகப் பயன்படுத்தவும் செலவை முடிந்தவரை குறைக்கவும் சிக்கனத்தைக் கடைபிடிக்கவேண்டியிருந்ததாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

விலையைக் குறைக்க மேம்பாட்டாளார்கள் எடுத்த நடவடிக்கைகளில் சிலவற்றை அவர் உதாரணங்களாகச் சுட்டினார். மூன்று ரயில் பணிமனைகளையும் பேருந்து பணிமனைகளையும் ஒன்று மீது ஒன்றாக அடுக்கியதால் நிலப் போக்குவரத்து ஆணையம் கிட்டத்தட்ட 2 பில்லியன் வெள்ளி சேமித்ததாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார். அடுத்ததாக, சொத்துக்களைப் பெருஞ்செலவில் தருவிக்கும்போது அதனைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான செலவு என்ன என்பதன் மீது கவனம் செலுத்துவது, செலவுகளைக் குறைப்பதற்கான மற்றொரு வழி என்றார் அவர்.

உச்ச வேளை பயணங்களுக்கும் உச்ச வேளையில் இல்லாத பயணங்களுக்கும் இடையிலான கட்டணங்களில் வேறுபாடு இருப்பது நல்ல பலனைக் கொடுத்திருப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இப்போது பயணிகளில் 12 விழுக்காட்டினர் காலை உச்ச நேரத்திற்கு முன்னரே பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்வதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைகள் அத்தனையும் எடுக்கப்பட்டாலும் உயர்தர பொதுப்போக்குவரத்துக் கட்டமைப்பைக் கட்டிக்காக்க வளங்கள் குறிப்பிட்ட அளவு தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். கூடுதலான ஆற்றலைச் சேர்ப்பதற்குக் கூடுதலான செலவு தேவைப்படுவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.