என்யுஎஸ் பல்கலைக்கழகத்தில் 'கிராப்வீல்ஸ்' மின்-ஸ்கூட்டர் முன்னோட்டச் சேவை ஒரு வாரத்திற்கு நிறுத்தம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) அதன் வளாகத்தில்  'கிராப்வீல்ஸ்' மின்-ஸ்கூட்டர் முன்னோட்டச் சேவையை ஒரு வாரத்திற்கு நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணமாக இன்று காலை இந்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் என்யுஎஸ்ஸில் அமைந்திருக்கும் 'கென்ட் ரிட்ஜ்' வளாகத்தில் இந்தச் சேவை அறிமுகமானது.

மாணவர்கள் மாற்று வழியில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கும் இந்தச் சேவையின் செயல்பாட்டு சாத்தியத்தை என்யுஎஸ்ஸும் கிராப் நிறுவனமும் பரிசோதித்து பார்ப்பது இந்த முயற்சியின் நோக்கம்.

"இந்த முன்னோட்டச் சேவை மாணவர்களிடையே பிரபலம் கண்டாலும், பலமுறை பாதுகாப்பு அறிவிப்புகள் செய்த பின்னரும், கிராப்வீல்ஸ் ஒட்டுநர்கள் மின்-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும்போது அறிவிப்புகளைக் கடைப்பிடிப்பதில்லை," என்றார் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுச்சூழல் அலுவலகத்தின் இயக்குநரான டாக்டர் பேக் தியான் குவான்.

இந்தச் சேவை மார்ச் 16ஆம் தேதி காலை 7 மணிக்கு மீண்டும் வழக்கம்போல் தொடரும்.