ஓடும் டாக்சியிலிருந்து விரைவுச் சாலையில் வெளியேறிய பயணி

டாக்சி ஓட்டுநர் மயக்கநிலையை அடைந்ததால், தடுமாறிய டாக்சியிலிருந்த பயணி நடுச்சாலையில் இறங்கினார். ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை பகல் 1.10 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம்வருகின்றன.  
இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்புக்கோரிய கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம், டாக்சி ஓட்டுநர் சிறிது நேரம் மயக்கமடைந்ததாக நேற்று கூறியது. சுயநினைவுக்கு வந்த ஓட்டுநர் தம் பயணி வாகனத்திலிருந்து இறங்கி விட்டதை உணர்ந்ததாகவும், பின்னர் விரைவுச்சாலையை விட்டு வெளியேறி மருத்துவ உதவி நாடியதாகவும் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். தற்போது டாக்சி ஓட்டுநரின் உடல்நிலை மருத்துவமனையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்பில் டாக்சியிலிருந்து வெளியேறிய பயணியுடன் தொடர்புகொண்ட நிறுவனம் அவருக்கு நேர்ந்த இச்சூழ்நிலைக்காக தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் பரிசுக் கூடையும் பற்றுச்சீட்டும் அனுப்பவுள்ளது.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வாகனமோட்டிகளிடமும் கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம்  மன்னிப்பும் கேட்டுக் கொண்டது. சம்பவம் தொடர்பில் புகார் கிடைத்துள்ளதாகவும் அதற்காக விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது.