அனைத்து ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களையும் சேவையிலிருந்து நீக்குகிறது சிங்கப்பூர்

சிங்கப்பூரில் அனைத்து போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களும் சேவையிலிருந்து நீக்கப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

இதுகுறித்து சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்று அறியப்படுகிறது.

நேற்று முன்தினம் எத்தியோப்பிய ஏர்லைன்ஸின் இதே ரக விமானம் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த 157 பேரும் மாண்டதைத் தொடர்ந்து இந்த முடிவை ஆணையம் எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

இதே ரகத்தைச் சேர்ந்த ஆறு விமானங்களைச் செயல்பாட்டில் வைத்துள்ள சிங்கப்பூரின் ‘சில்க் ஏர்’ நிறுவனத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் இந்த முடிவு, இதே ரக விமானத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு விமானச் சேவைகளையும் பாதிக்கும் என்று தெரியவருகிறது.

ஐந்து மாதங்களில் இதே ரக விமானம் இரண்டாவது முறையாக விபத்துக்குள்ளானதையடுத்து நேற்று சீனாவும் இந்தோனீசியாவும் இந்தச் சேவை நீக்க முடிவை எடுத்துள்ளன.