கதவை மூடாமல் எம்ஆர்டி ரயில் அங் மோ கியோ ரயில் நிலையத்திலிருந்து நகர்ந்தது; நிலைய மேலாளர் பணி நீக்கம்

வடக்கு-தெற்கு ரயில் பாதையில் நேற்று முன்தினம் கதவு திறந்தபடி ஓடிய ரயில் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அங் மோ கியோ ரயில் நிலையத்திலிருந்து இயோ சூ காங் நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்த அந்த ரயிலின் ஒருபக்கக் கதவுகள் திறந்தவாறு இருந்தன.

நேற்று இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததை எஸ்எம்ஆர்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.

நிலைய மேலாளர் ரயிலுக்குள் இருந்தார் என்றும் ரயில் கதவு பிரச்சினை ஒன்றைச் சரிசெய்துகொண்டிருந்தார் என்றும் எஸ்எம்ஆர்டி கூறியது.

கதவைவிட்டுத் தள்ளி பாதுகாப்பாக இருக்கும்படி அவர் சொன்னதாகவும் சுமார் 200 மீட்டர் தூரம் சென்றதுமே ரயில் மீண்டும் அங் மோ கியோ நிலையத்திற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.

பயணிகள் பாதுகாப்பாக நிலையத்தில் இறங்கினர்.

நிலைய மேலாளர் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் பணியை மேற்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாகவும் உடனே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.