தாமான் ஜூரோங் காப்பிக் கடையில் கைகலப்பு; இருவர் கைது 

தாமான் ஜூரோங்கில் அமைந்துள்ள காப்பிக் கடையில் இம்மாதம் மூன்றாம் தேதி நடந்த கைகலப்பின் தொடர்பில் இரு ஆடவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் மற்றோர் ஆடவரைக் கை ஆயுதம் கொண்டு தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்திற்காக 60, 66 வயதுடைய இரு ஆடவர்களைக் கைது செய்துள்ளதாக இன்று வெளியிடப்பட்ட போலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

புளோக் 101 யுங் ஷெங் சாலையில் அமைந்துள்ள அந்தக் காப்பிக் கடையில் வழக்கமாக ஒன்றாகச் சாப்பிட வரும் நால்வருக்கு மத்தியில் சண்டை மூண்டது. 

சம்பவம் நடந்த இடத்திற்கு போலிஸ் சென்றபோது துன்புறுத்தியவர்கள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர். 

காயமடைந்த 52 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.