ஈசூன் எம்ஆர்டி நிலையத்தில் காயமடைந்த மூதாட்டிக்கு உதவியோருக்குப் பாராட்டு

ஈசூன் எம்ஆர்டி நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் (மார்ச் 12) காயமடைந்த மூதாட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சுலைமான் என்பவர் மதியம் 2.10 மணிவாக்கில் எம்ஆர்டி நிலையத்திற்கு வெளியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது சம்பவத்தை நேரில் கண்டார்.

“அந்தப் பெண் 70 வயதுகளில் இருப்பவர் போலத் தெரிந்தார். அவர் கீழே விழுந்துவிட்டார் என நினைக்கிறேன்,” என்றார் அவர்.

மூதாட்டிக்கு உதவி செய்த நிலைய ஊழியர்களையும் பொதுமக்களையும் சுலைமான் பாராட்டினார். குறிப்பாக, “ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மூதாட்டிக்குத் துணை புரிந்த” ஓர் ஆடவரை அவர் குறிப்பிட்டார்.

உதவி கோரி தொலைபேசி அழைப்பு கிடைத்ததாகவும், அவசர மருத்துவ வாகனத்தில் ஒருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது.