$40 மி. கையாடிய கணக்காளர்  ஆயுள் தண்டனையை எதிர்நோக்கலாம்

பல நிறுவனங்களிடமிருந்து $40 மில்லியனுக்கு மேல் கையாடிய கணக்காளர் இயூ பங் கூய், 65, நேற்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
சான்றுபெற்ற சிங்கப்பூர் பொது கணக்காளர் என்ற முறையில் பத்து ஆண்டுகளில் 21 நிறுவனங்களை செயலிழக்கச் செய்யவும் இரு நிறுவனங்களின் நிதிகளை நிர்வகிக்கவும் பொறுப்பேற்றிருந்தார் இயூ. 
நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளையும் சொத்து களையும் நிர்வகித்த அவர், அவற்றிற்குரிய பணம் தனக்குச் சேரச் செய்தார். இவ்வாறு நிறுவனங்களின் பணத்தைக் கையாடித் தன் சூதாட்டப் பழக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டார். 
மலேசியாவைச் சேர்ந்த நிரந்தரவாசியான இயூ, நம்பிக்கை மோசடி தொடர்பில் 50 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கவில்லை. முகவராக நம்பிக்கை மோசடி செய்ததற்கு இயுவுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.