பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு 10 ஆண்டு சிறை 

தம்மைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த இல்லப் பணிப்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 53 வயது பாதுகாவலருக்கு நேற்று பத்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 
அந்த 26 வயது இந்தோனீசியப் பணிப்பெண், ஆடவரின் உறவினர் வீட்டில் வேலை செய்து வந்தவர். சிங்கப்பூரரான அந்த ஆடவர் அந்த வீட்டுக்கு அடிக்கடி வரும்போது அங்கேயே தங்கி விடுவார். அந்த உறவினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். பணிப்பெண் அங்கு பணியாற்றிய சில மாதங்களுக்குப் பிறகு ஆடவர் அவரிடம் சென்று தம்மைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட் டார். ஆனால், அந்தப் பெண் அதை மறுத்துவிட்டார்.
அப்போதிலிருந்து ஆடவருக்கு அவருக்குப் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வந்தார். ஆடவர் பற்றி தாம் புகார் அளித்தாலும் அதை தமது முதலாளி நம்ப மாட்டார் என்று நினைத்ததால் பணிப்பெண் அது பற்றி எதுவும் கூற வில்லை.
ஆனால், 2017ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று ஆடவர், பணிப்பெண்ணின் அறைக்குள் சென்று அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அதை மறைக்க பணிப்பெண்ணிடம் ஒரு ஜோடி தோடுகளைக் கொடுத்தார்.  பின்னர் அந்த ஆடவர் தூங்கிக்கொண்டிருக்கும்போது. பணிப்பெண் வீட்டை விட்டு சென்று, வழிபோக்கர் ஒருவர் மூலம் போலிசில் புகார் கொடுத்தார். 
பாலியல் பலாத்காரத்துக்கு 20 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம். ஆனால் அந்த ஆடவரின் வயது 50க்கு மேற்பட்டிருந்ததால் அவருக்குக் கொடுக்க வேண்டிய பிரம்படிக்குப் பதிலாகக் கூடுதலாக ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.