‘பிரேடல் வியூ’வின் ஒட்டுமொத்த விற்பனை - விரைவில்

சிங்கப்பூரின் ஆகப் பெரிய தனியார் குடியிருப்பான ‘பிரேடல் வியூ’ ஒட்டுமொத்த விற்பனைக்காக மார்ச் 27ஆம் தேதியில் ஏலக் குத்தகைக்கு விடப்படும். அதற்கு ஆகக் குறைந்த விலையாக $2.08 பில்லியன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னைய எச்யூடிசி குடியிருப்பான இதன் உரிமையாளர்கள் இரண்டு மில்லியன் முதல் நான்கு மில்லியன் வரை பெறலாம் என்று சொத்து விற்பனை முகவையான ‘கோலியர்ஸ் இன்டர்நேஷனல்’ தெரிவித்தது.

குடியிருப்பின் உரிமையாளர்களில் 80 விழுக்காட்டினர் சொத்தை ஒட்டுமொத்த விற்பனைக்குவிட ஒப்புக்கொண்டதை அடுத்து விற்பனை நடவடிக்கைக்கான அறிவிப்பு வெளிவந்தது. ஆகக்குறைந்த விலையாக சதுர அடிக்கு 1,199 வெள்ளி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏலக் குத்தகை மே 28ஆம் தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடையும்.
 
பிரேடல் வியூ 1.14 மில்லியன் சதுர அடி பரப்பளவைக் கொண்டது. 1978ல் கட்டப்பட்ட இக்குடியிருப்பின் மீதமுள்ள குத்தகைக் காலம் 61 ஆண்டுகள். 
மறுமேம்பாட்டுப் பகுதி தனித்தனியாக இரு நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று 618,221 சதுர அடி பரப்பளவைக் கொண்டது. மற்றது 524,055 சதுர அடி பரப்பளவைக் கொண்டது.